Thursday, May 19, 2011


அன்புள்ள தந்தையே..

நீங்கள் நீங்கள் தான். பல முறை நான் விரும்பும் முறையில் உங்களை நடக்க வைக்க ஆசை பட்டதோடு மட்டுமில்லாமல், நீங்கள் நீங்களாகவே இருந்ததற்கு வெறுப்பும் ஆகியுள்ளேன். வெளியில் பெண்பால் நண்பர்களிடம், "யாராயினும் அவர்களை அவர்தம் விருப்பப்படி விடுவதே சுதந்திரம்" என்று வெட்டி வீராப்பாய் பேசிவிட்டு உங்களை பேச விடாமல் தடுத்துருக்கிறேன். உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சித்தது கூட இல்லை. ஏன், உண்மையில் உங்கள் விருப்பத்தை பற்றி சிந்தித்தது கூடயில்லை. ஆனால் நீங்கள் என் விருப்பத்தை தவிர வேறெதையும் சிந்தித்தாகக் கூட தெரியவில்லை.

இன்று உங்களைப் பார்த்து, "அப்பா மன்னிச்சுருங்க" னு சொல்ல மனசு துடிக்குது. ஆனா, உங்க அன்பான கண்ணைப் பாத்து சொல்ல எனக்கு தைரியம் இல்லையேப்பா.. "எனக்கொரு பொம்பளை பிள்ள இருந்தா என் மேல பாசமா இருந்துருக்கும்" னு நீங்க ஏங்குனதைக்கூட, என்ன ஆச்சு இவருக்கு லூசு மாதிரி பேசுறாரு காலம் போன காலத்துலனு அசட்டை பண்ணிருக்கேன். "உங்களுக்கு என்ன தெரியும்", அடிக்கடி நான் என் தந்தையிடம் பயன்படுத்தும் வரிகள். மாறாக அவரோ, 'இல்லப்பா இப்டி செய்யலாம்'னு கேட்டேன்னு தான் குரலைத் தாழ்த்தி சொல்வார். நீங்க காட்டுன வழில நடந்திருந்தா கூட இன்னைக்கு நான் ஒரு IAS அதிகாரி ஆயிருக்கலாம்.

என் தந்தையை பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் யோசிக்கும் போது 'லட்சியமே இல்லாத மனிதர்' என்று நினைப்பேன். இன்று புரிகிறது அவர் லட்சியமே என்னை சமுதாயத்தில் நல்லா நிலை அடைய செய்வதே என்று. இன்று உண்மையில் புரிகிறது நான் தான் 'லட்சியமே இல்லாது நாட்களைப் போக்கும் கருவேல மரம்' என்று. என் வாழ்க்கையுடன் என் தந்தையின் இலட்சியத்தையும் வீணாக்கிவிட்டேன். சமீபத்தில் ஒரு விழாவிற்குச் சென்ற போது ஒருவர், "இன்னாரின் பையன் போல ஒரு பண்பான ஞானமுல்லா இளைங்கனைப் பார்ப்பது அரிது" என்றார். என் தந்தையின் உதடுகள் மலர கண்ணில் நீர் வழிந்தது. மிகவும் தைரியமான நபர் இப்படி ஒரு இளகின மனமா உங்களுக்கு என்று அதிர்ந்து போனேன்.

என் தந்தை சற்று வித்தியாசமானவர். எப்பிடினா எல்லா தந்தைகளும் தன் மகன் சைக்கிள் பழகும் போது பின்னாலேயே ஓடி வருவார்கள் என் தந்தையோ: நான் 3ம் வகுப்பு படிக்கும் போது. பஸ்ல தொடர்ந்து போக எரிச்சல்; மேலும் என் நண்பர்கள், "டேய் உனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாதுல" என கேக்கும் போது உண்டாகும் கடுப்பு, எல்லாம் சேந்து "நாளைக்கு சைக்கிள்ல தான் போவேன் இல்லேன்னா நான் ஸ்கூல் க்கு போகல" என்றேன். என் முரண்டுத்தனம் என் தந்தையின் இறுக்கத்தை வென்றது. அடுத்த நாள் பள்ளிக்குச் சைக்கிளில் செல்லும் போது, என் நண்பன் "டேய் அங்க பாருடா உங்கப்பா பின்னாடியே ஓடி வாராரு" என்றான். ஆம் நாலு கிலோ மீட்டர் பின்னாலேயே ஓடி வந்து எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதை உறுதி செய்து விட்டுப் போனார். அத்தகைய தந்தைக்கு என்ன செய்தேன்?

இன்றும் பல நேரங்களில் என் தந்தை வெள்ளந்தியாக பேசுவது எனக்கு மிகுந்த எரிச்சலையும், பயங்கர கோவத்தையும் உண்டாக்குகிறது. நான் கோவப்படும் போதும் பொறுமையாக, "எங்கய்யாவ நான் இப்பிடி தான் வஞ்சேன், நீ என்ன வைறப்பா" என்பார். கூடக் கொஞ்சம் திட்டுவேன். ஆனால் என் தந்தையின் வார்த்தையில் அவ்வளவு சத்தியம் உள்ளது.

என் மகன் எனக்கு பெருமையைத் தேடி தருவான் என்ற எண்ணம் அவர் மனதி ஓடிக்கொண்டிருக்கிறது. அவர் அவநம்பிக்கை இன்றி இன்றும் தைரியமாகவே உள்ளார். எனக்கோ மனசாட்சி, "நம்மால் அப்பா சிறுமைப் படாமல் இருந்தாலே ஆண்டவன் புண்ணியம்" எனத் தோன்றுகிறது. நம் கர்வமும் தலைகனமும் கை கோர்த்திருக்கும் வரை தலை கால் புரியாது போல. உண்மை விழங்கும் நேரம் வாழ்க்கையின் முக்கிய பகுதிகள் கடந்து விட்டன.

இப்போதெல்லாம், முன்பு கடினமான நேரங்களில் அப்பா நடந்து கொண்டதை நினைத்துப் பார்த்து பிரம்மிக்கிறேன். எவ்வளவு பிரச்சனைகள்? எவ்வளவு போராட்டங்கள்? அந்த நிலையிலும் மனுஷன் நிம்மதியாக தூங்க முயல்வார். "வருத்தப்படுறீங்களாப்பா?" என்றால் "இல்லைப்பா" என்பார். உண்மையை சொல்லுங்கப்பா என்றால், "தூங்காம இருந்தா என்ன ஆகப்போகுது? நம்பிக்கையையும் தைரியத்தையும் விடக்கூடாது" என்பார்.

இந்த வலைப்பூவைப் படிக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் இன்னும் என் தந்தையைச் சேரவில்லை. இருந்தாலும், ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன்.

இப்படிக்கு,
உண்மையில் நேசிப்பதை சொல்ல முடியாத மகன்களின் குரல்.

10 comments:

  1. அருமை பால்.. அந்த சைக்கிள் பத்தி வாசிக்கும் போது என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன்.. அப்பாக்கள் என்பவர்கள் நம்மால் எள்ளி நகையாடப்படும் நிஜ ஹீரோக்கள்.. எந்த மனிதனும் எவனுக்காகவும் தன் ஈகோவை விட்டுக்கொடுக்க மாட்டான், தாய் உட்பட.. ஆனால் தந்தை மட்டுமே தன் ஈகோவை மகனுக்காக தூக்கி எறிவான்.. பால், அதே மாதிரி spelling mistakes வராம பாத்துக்கோ

    ReplyDelete
  2. நன்றி நண்பா.. கண்டிப்பாக இனிமேல் இதைப் போன்ற தவறுகள் வராமல் கவனித்துக்கொள்கிறேன்..

    ReplyDelete
  3. அன்பு தம்பியின் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள், ஒரு அன்பு வேண்டுகோள், இல்லை கட்டளை என்று கூட வைத்து கொள், அந்த உரிமை எனக்கு இருக்கிறது ( என்று நம்புகிறேன்) , இனியும் ஒரு தடவை கூட உன் அப்பாவிடம் "உங்களுக்கு என்ன தெரியும்" என்று கேட்காதே. அது ஒரு தகப்பனுக்கு ரொம்பவும் வலிக்கும்!!. அப்பாவை பற்றி இவ்வளவு நினைவு கூறும் உனக்கு அவரின் கேள்விக்கு பதில் கூறும் பொறுமையும் இருக்க வேண்டும். நிதானமா புரிய வை, நிச்சயம் புரிந்து கொள்வர். இந்த வலைப்பூ தொழில்நுட்பம் இன்னும் உன் தந்தையைச் சேராமல் இருக்கலாம் . அவர் அருகில் நீ இருக்கிறாய் அல்லவா? அவரை மகிழ்வாய் வைப்பதே உனக்கு நிலையான ஆத்ம திருப்தி அளிக்கும். நீ கோபுரமாய் நின்றாலும் உன் அடித்தளம் அவர் மட்டுமே!!!!!

    ReplyDelete
  4. நன்றி அக்கா.. இந்த பதிவு தான் நான் மிக விரைவாகவும், நேசித்தும் எழுதிய பதிவு.. இதற்கு நான் எடுத்துக்கொண்டது 15 நிமிடம்.. ஆனால் எழுதும் போதே பல இடங்களில் கண்களைக் கண்ணீர் சூழ்ந்து கொண்டது. இதில் என் தந்தையை மட்டும் அல்ல என் நண்பர்களின் தந்தைகளையும், மேலும் நான் சந்தித்த சூழ்நிலைகளையும் வைத்தே எழுதினேன். இதில் குறிப்பிடும் 'நான்' என்ற சொல் என்னை மட்டும் குறிப்பிடுவாதாக நான் எழுதவில்லை. இருப்பினும், "உங்களுக்கு என்ன தெரியும்" என்பதைப் பயன்படுத்தும் மகன்களில் நானும் ஒருவன் என்பதைத் தலைகுனிவோடு ஏற்றுக்கொள்கிறேன். தந்தையை மகிழ்விப்பதைத் தவிர மேலோங்கிய திருப்தி ஒரு மகனுக்கு கிடைக்கப் போவதில்லை. உங்கள் அன்பான பதிவிற்கும் ஆலோசனைக்கும் உள்ளம் கனிந்த நன்றிகள்.

    ReplyDelete
  5. காலம் அனைத்தையும் கற்றுக் கொடுக்கும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக மறுக்க முடியாத உண்மை.. நன்றி நண்பரே தங்கள் நேரத்திற்கும், கருத்து பதிவிற்கும்..

      Delete
  6. தந்தையைப் பற்றி நீ ஒரு தந்தையாகும் போது புரிந்து கொள்வாய் என்பார்கள்... அதற்கு முன்பாகவே புரிந்து கொண்டோமே என மகிழ்வடையுங்கள்....
    நல்ல பகிர்வு.. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. மனமார்ந்த நன்றி எழில் அவர்களே..

    ReplyDelete
  8. உணர்வுகளை எழுத்துக்களால் வரைந்த ஒரு நல்ல பதிவு. வாழ்த்துகள் பவுல்

    ReplyDelete
    Replies
    1. நேரம் ஒதுக்கி வாசித்தமைக்கு மனமார்ந்த நன்றி நண்பரே. மகிழ்ச்சி.

      Delete